கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பெற்று வீடு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணம் அடைந்து இன்று வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், அக்கட்சியின் நிறுவனத் தலைவராகவும், அவரது மனைவி பிரேலமதா விஜயகாந்த் தேமுதிக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.