தனது 'என் மண் என் மக்கள்' நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னையின் மீது மேககுவியல்கள் அதிகமாக காணப்படுவதால், வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தொடர் மழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 30ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். தமிழகத்தின் அநேக இடங்களில் டிசம்பர் 3 வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அந்தமான் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு வெகு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பாஜக சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு கருதி, 'என் மண் என் மக்கள்' நடைபயணம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. டிசம்பர் 6 முதல், மீண்டும் நடைபயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.