கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து போட்டியிட்டவரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான நடராஜை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகி நடராஜை சென்னையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் மத்தியிலும், ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிகை என்ற ஊரைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் ஒட்டன்சத்திரம் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் நடராஜிடம் கார் ஓட்டுநராகவும், பால் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணிகளையும் கவனித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சுரேஷ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து வடிவேல் என்பவர் மூலம் இரவோடு இரவாக எரிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓடைப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த வடிவேல், ஓட்டுநர் சுரேஷ்குமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாகவும் இதனால் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் சில தகவல்களையும் வாக்குமூலமாக கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை கைது செய்ததோடு அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் நடராஜை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் தங்கியிருந்த நடராஜை திண்டுக்கல் போலீஸார் கைது செய்து விசாரணைக்காக திண்டுக்கல் அழைத்துச் சென்றனர்.
இப்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நடராஜ் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது கூடுதல் தகவலாகும். சக்கரபாணியை தேர்தலில் வீழ்த்துவார் என எடப்பாடி பழனிசாமியால் பெரிதும் நம்பப்பட்டவர். இதனிடையே அதிமுக நிர்வாகி நடராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது திண்டுக்கல் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.