சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்ற வேண்டும் என்ற சர்ச்சை பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் மிகப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
சென்னிமலையில் அண்மையில் கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பினர் நிகழ்ச்சி ஒன்றில் சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசுமலை என மாற்ற வேண்டும் என பேசியதாக இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. இதற்கு சென்னிமலை முருக பக்தர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், சென்னிமலை ஆண்டவர் குழு பொதுமக்கள் என்ற பெயரில் "சென்னிமலையை காப்பாற்றுவோம்" என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னிமலையில் நேற்று மாலை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சென்னிமலை பாதுகாப்புக்கான இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். மேலும் காவி கொடிகளுடன் பெரும் எண்ணிக்கையில் முருக பக்தர்கள் திரண்டு, சென்னிமலையை பாதுகாப்போம் என முழக்கங்களை எழுப்பினர்.