திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல் சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். கடத்தலில் தொடர்புடைய பெண் போலீசில் சிக்கிய நிலையில் திடீரென மரணம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளப்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். கட்டட தொழிலாளி. இவரது மனைவி ரதி. இவர்களது ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஸ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளாகத்தில் கடந்த 5ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடத்திச் சென்றார்.
இது குறித்து ரதி திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் ஒரு ஆணுடன் பைக்கில் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் ஆங்காங்கே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் பைக் நம்பர் கண்டறியப்பட்டது. தொடர் விசாரணையில் அவர்களது செல்போன் சிக்னல் மூலம் குழந்தையை கடத்தியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவை ஆலந்துறை போலீசாருக்கு தனிப்படை போலீசார் தகவல் கொடுத்தனர்.
ஆலந்துறை போலீசார் பூண்டி சாலை முட்டது வையல் குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்த பாண்டியன் மற்றும் திலகவதி இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டனர் குழந்தை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் திலகவதி திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்தார். பிடிபட்ட பாண்டியன் மீது ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தை சேலத்தில் மீட்பு
கோவை மாவட்டம் ஆலந்துறை போலீசார் குழந்தையை கடத்தி வந்த திலகவதி, பாண்டியன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இதில் பாண்டியன் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூரைச் சேர்ந்தவர். இதனால் பாண்டியன் அவரது ஊரில் உள்ள ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்தது தெரியவந்தது. சேலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தென்னம்பிள்ளையூர் சென்ற போலீசார் குழந்தையை நேற்றிரவு மீட்டு அங்குள்ள காப்பகத்தில் பத்திரமாக விடப்பட்டது. போலீசாரின் சட்ட நடவடிக்கைக்கு பிறகு குழந்தை திருச்செந்தூர் கொண்டுவரப்பட்டு பின்னர் முறைப்படி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பெண் இறந்தது எப்படி?
குழந்தை கடத்தல் வழக்கில் கோவை ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திலகவதி இறந்த சம்பவம் குறித்து கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குழந்தையை கடத்திய தம்பதி கோவை ஆலந்துறை பகுதியில் இருக்கும் தகவலை திருச்செந்தூர் போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பெயரிலும், செல்போன் சிக்னல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் பிடித்தனர். அப்போது அவர்களிடம் கடத்தப்பட்ட குழந்தை இல்லாததால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது, தான் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற திலகவதி திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவர் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இருந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பெண் இறந்ததற்கான முழு விவரமும் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்