காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தீர்மானம் இல்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏ க்கள் வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் தனித்தீர்மானம் குறித்த விவாதத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ க்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தனித்தீர்மானம் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இல்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் பாஜக எம்எல்ஏ க்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.