சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது :-
முதலமைச்சரை சந்தித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.
இது சாதி பிரச்சனை இல்லை. சமுக நீதி பிரச்சனை. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமுதாயம் வன்னியர் சமுதாயம். வன்னியர் சமூகத்தினர் 20 மாவட்டங்களில் இருக்கிறார்கள். ஆனால் அந்த மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களாக அதிக வேலைவாய்ப்பு இல்லை. கல்வி அறிவில் பின்தங்கியுள்ளது. அதிக குடிசைகள் உள்ள மாவட்டங்களாக உள்ளது. அதிக மதுவிற்பனை இருக்கும் மாவட்டம் வடமாவட்டங்கள். இதனைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரலாம். தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால் இந்நேரம் கொண்டு வந்து இருப்பார்கள். இந்த எண்ணம் முதலமைச்சருக்கு இருக்கிறதா இல்லையா என பார்க்கலாம்.
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூகநீதியை காக்க முடியும். தமிழகத்தில் சமூகநீதி பற்றி பேசும் திமுக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். சமூக நீதி என்று பேசினால் போதாது, தமிழக அரசு அதனை செயலில் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.