அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர்களில் ஒருவரான டிடிஎஃப் வாசன் மீது கடந்த சில காலமாகவே அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாகப் புகார்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டி, அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்.
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் அவர் விபத்து ஒன்றில் சிக்கினார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்ய முயன்ற போது விபத்தில் சிக்கினார். சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் சென்ற போது ஸ்டண்ட் செய்ய முயன்றார். அப்போது விபத்தில் சிக்கினார்.
அதிவேகமாகச் செல்லும் போது அவர் வீலிங் செய்ய முயன்ற நிலையில், அவரது பைக் நிலைதடுமாறி இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது.. இதனால் அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதும் செய்யப்பட்டார். யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அது குறித்து அவர் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதையடுத்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து 2033 அக். மாதம் வரை டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.