வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. பல இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (சனிக்கிழமை) லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து வருகிற 18, 19-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.