கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திரைத்துறை உலகத்தின் பார்வையில் கலைஞர் என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் நடிகர் ரஜினிகாந்தின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி கலைஞரின் அரசியல், இலக்கியம், எழுத்து, திரைப்பயணம் , வசனம் என பல்வேறு துறைகளில் அவருடைய பங்களிப்பு குறித்து பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திரைத்துறை உலகத்தின் பார்வையில் கலைஞர் என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் நடிகர் ரஜினிகாந்தின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ரஜினி தனக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான பழக்கம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் முரசொலியில் கூறியிருப்பதாவது: தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரும் புகழின் உச்சிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர். 1980 ஆம் ஆண்டு நான் ஒப்பந்தமாகியிருந்த திரைப்படத்தில் கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்.
அப்போது எளிமையான தமிழை பேசவே சிரமப்படும் போது உங்களின் வசனங்களை நான் எப்படி பேசுவது என அவரிடமே சொன்னேன். இருப்பினும் அவர் வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ, தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருக்கிறது. எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை நிச்சயம் பல பேரின் ஆலோசனைகளை கேட்டே கலைஞர் முடிவெடுத்திருப்பார்.
எதையும் தாங்கும் இதயம் என்ற அண்ணா கலைஞரை நினைத்துதான் சொன்னாரோ? வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக்கோப்பாக ஒரு தனி ஆளாக கட்சியை வழிநடத்தி மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.
1977 ஆம் ஆண்டு நான் சென்று கொண்டிருந்த போது எனக்கு பின்னால் ஒரு கார் வந்தது. அதில் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கலைஞர் உட்கார்ந்திருந்தார். உடனே நான் வழிவிட்டேன். அப்போது அவரது கார் என்னை தாண்டி போகும் போது ஒரு சிரிப்பு சிரித்தார். அதை நான் இன்றும் மறக்கவில்லை. அதுதான் நான் கலைஞரை முதலில் சந்தித்தது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.