சமீபத்தில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓரிரு தினங்களுக்கு முன்பு, பாஜக அதிமுக இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனமான எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டு சென்றதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து எம்ஜிஆர் சிலையில் போட்டிருந்த காவிரித்துண்டை காவல்துறையினர் நீக்கினர். அதிமுகவினரின் சாலை மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.