இந்திய இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 133 அதிகாரம் கொண்ட 1330 குறள்களில் அண்டசராசரம் அனைத்தையும் அடக்கியவர் வள்ளுவர். அதனால் திருக்குறள் உலக பொதுமறை என்று போற்றப்படுகிறது. அந்த வகையில் சமீபகாலமாக பிரதமர் மோடி எங்கு உரையாற்றினாலும் திருக்குறளை சொல்லி அதன் சிறப்பையும் கூறு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளுவர் தினமான இன்று அவரை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில், “போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.