சமீப காலமாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களது வீடுகளில் நடைபெறக்கூடிய இறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களிடமும், இறுதிச் சடங்கின் போதும், தங்களது யூடியூப் சேனல்களில் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும், டிவி சேனல்களில் டிஆர்பி அதிகரிக்க வேண்டும் என்று டிவி சேனல்கள், யூடியூப் சேனல் பெரும்பாலானவர்களின் செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாகவும், இப்படி நடக்க கூடாது. இவை தவிர்க்க பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இறுதி சடங்கு விஷயத்தில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு நெறிமுறைகள் வேண்டும். போலீசார் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த விஷயத்தில் கடுமை காண்பிக்க வேண்டும். வரம்பு மீறுபவர்களுக்கு இறுதி சடங்கு என்பது விற்பனைக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில்,
இது தொடர்பாக, நடிகரும் இயக்குனருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :-
மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இப்படி காண்பிக்கலாமா? முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்த நிகழ்வை படமாக்க வேண்டும் கூடாது என்று. இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சி திருடுவதை செய்கின்றனர். நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை காட்டுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? சினிமாக்காரனின் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலி சித்திரமா? மீடியாக்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. ஒரு மூத்த கலைஞராகவும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் இந்த செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி இல்லாமல் மீடியாக்களை போலீசார் அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.