நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட போலி கம்பெனி பெயர்களில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன், இயக்குனர் சிங்காரவேலன் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். நான் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தேன். சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துள்ளோம். இங்கு மத்திய அரசின் பெரிய பெரிய திட்டங்கள் வரவுள்ளன என ஆசை வார்த்தை கூறி பணம் வசூலித்தனர். ஆனால் கூறியபடி பணமோ, நிலமோ தரவில்லை.
இவர்கள் முதலீடு பணத்தை கல்லூரிகள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. தற்போது வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். மோசடியில் ஈடுபட்டவர்களுடன் விசாரணை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இதுவரை 5000 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகள் சோதனையிடப்படும். பிரதான குற்றவாளி ஏன் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிபிஐக்கு மாற்ற வேண்டியது வரும். விசாரணை செப். 29-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.