நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் என்றும், அவர் சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று இரவு உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அறையில் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்த விஜய் ஆண்டனி, வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி கார் மூலம் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக காவேரி மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விஜய் ஆண்டனி கடந்த 2006-ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் மகள் மீரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.