மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டிய பொருளாகவே தக்காளி மாறிவிட்டது, என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் வெங்காயம் மற்றும் தக்காளி விலைகளின் ஏற்றம் என்பது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தக்காளி ரூ 110 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி செடிகளை நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். திடீரென மழை பெய்ததால் செடிகள் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டன. விலையும் குறைவாக கானப்பட்டதால், மறு நடவு பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தவில்லை. இதுவே விளைச்சல் குறைவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. தற்போது தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில் வேகமாக நடவுப் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
மேலும் ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதை இரு மடங்கு விற்பனையில் ஒரு கிலோ 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மொத்த வியாபாரிகளே பெரும்பாலும் கமிஷன் ஏஜெண்டுகளாக உள்ளதால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முறை முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
விலை உயர்வு பிரச்சனை என்பது ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் தொடர்ந்து ஏற்படுவதால் இது போன்ற பிரச்சனைகள் வரும் ஆண்டுகளில் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.