கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் விடுமுறை அறிவிக்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் கலகலப்பாக பதில் அளித்து இருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. பல ஆண்டுகள் இல்லாத வகையில் மழை பதிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மாணவர்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை இதனை அடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
இந்த நிலையில் விருதுநகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் கலகலப்பாக பதில் அளித்து இருக்கிறார்.
'சார் சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா' என மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம் ட்விட்டர் மூலமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதற்கு கலகலப்பாக பதில் அளித்துள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி 'இல்லை மாலையில் மழையை ரசித்து விட்டு அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்லுங்கள்' என பதில் அளித்து இருக்கிறார்.
தற்போது மாணவனின் கேள்வியும் ஆட்சியரின் பதிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.