டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுடன் இரு சக்கர வாகனத்தில்அதிவேக பயணம் செய்த யூடியூபர் டி.டி.எப் என்கின்ற வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த வாசன் என்ற இளைஞர் பைக்கில் அதிக வேகத்தில் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவர் வெளியிடும் வீடியோக்கள் பைக் மீது ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிடித்துவிட படிப்படியாக இவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
தற்போது இவரது யூடியூப் சேனலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 32 லட்சம். இருசக்கர வாகனத்திலேயே பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இவர் பைக் சாகசங்கள் மட்டுமின்றி தனது பயண அனுபவங்களையும் VLOG ஆக பதிவிட்டு வந்தார். இப்படி யூடியூப்பில் உச்சத்துக்கு சென்ற இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் வாங்கி சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் மீது கோவை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கடந்த 14.09.2022ம் தேதி TTF வாசன் என்ற நபர், அவரது இரு சக்கர வாகனத்தில் Youtuber G.P. முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து, கோவை மாநகரம், D3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாலக்காடு மெயின் ரோடு, MDS பேக்கரி அருகே, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி, அதை பதிவு செய்து, அவரது Twin Throttlers என்ற Youtube channelல் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக, D3 போத்தனுார் காவல் நிலைய குற்ற எண். 582/2022 u/s 279 IPC, 184 MV Actல் மேற்படி TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது