அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்; 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது.
15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படும் இத்திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்டது.
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் முதற்கட்டமாக செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.