சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக துவங்குகிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.
இதில், இந்திய செஸ் அணியில் இடம் பெற்றுள்ள 30 பேரில் பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷ், சசிகிரண், கார்த்திகேயன், அதிபன், சேதுராமன், என 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
பிரக்ஞானந்தா ( 16 )
சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்தை 10 வயதில் பெற்றவர். உலக தர வரிசையில் 107வது இடத்தில் உள்ளார். 2022ல் பல்வேறு தொடர்களில் வென்றார். இந்த ஆண்டு நடந்த 'ரேபிட்’ செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை 3 மாத இடைவெளியில் 2 முறை வீழ்த்தினார். உலக சாம்பியனை வீழ்த்திய இளம் வீரர் என பெருமை பெற்றார்.
வைஷாலி ( 21 )
பிரக்ஞானந்தாவின் சகோதரி, தரவரிசையில் 29 ஆக உள்ளார். 2020 ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றார்.
அதிபன் ( 29 )
செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற (2014) அணியில் இடம் பெற்ற இவர், 219வது இடத்திலுள்ளார். 2014ல் சுவிட்சர்லாந்து செஸ் தொடரில் கோப்பை வென்றுள்ளார்.
சசிகிரண் ( 41 )
இந்திய அணியில் இடம் பெற்ற மூத்த வீரர். தற்போது 99வது இடத்தில் உள்ள இவரது அனுபவம், இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கைகொடுக்கும்.
சேதுராமன் ( 29 )
செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற (2014) அணியில் இடம் பெற்றவர், 151வது இடத்திலுள்ள இவர், 2016 ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் கோப்பையை கைப்பற்றினார்.
குகேஷ் ( 16 )
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர், தரவரிசையில் 54வது இடத்தில் உள்ளார். 2018 யூத் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றார்.
கார்த்திகேயன் ( 23 )
ஹங்கேரியில் நடந்த 16 வயதுக்குட்பட்ட செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். 178வது இடத்தில் உள்ளார்.