திருவள்ளூர் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கும் என மாவட்ட எஸ்பி கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் மப்பேடு அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி வசதியும் உள்ளது. இங்கு தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இன்று காலை அந்த மாணவி விடுதியிலிருந்து பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து கொண்டு ரெடியானதாக தெரிகிறது. இதையடுத்து தோழிகளுடன் சென்று உணவு அருந்திவிட்டு சென்ற அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த மாணவி காலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த தகவலை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு மிகவும் தாமதமாக தெரிவித்ததாகவும் அது கூட இறந்தார் என கூறாமல் உடல்நிலை சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று மட்டுமே கூறியதாக பெற்றோரும் உறவினர்களும் புகார் கூறுகிறார்கள்.
ஏற்கெனவே கள்ளக்குறிச்சியில் நடந்தது போல் கலவரம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் மாவட்ட எஸ் பி கல்யாண், சிபிசிஐடி எஸ்பி செல்வகுமார் உள்ளிட்டோர் அந்த பள்ளியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட எஸ் பி கல்யாண் கூறுகையில், திருவள்ளூரில் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அந்த இடத்திற்கு போய் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். பள்ளிகளில் எந்த மாணவர்கள் இருந்தாலும் அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக மாற்றிவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே ஹைகோர்ட் அறிவுறுத்தலின்படி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளோம். மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்து சிபிசிஐடி விசாரணையில் தெரியவரும் என்றார். மாணவி மரணத்தால் உறவினர்கள் நடத்தி வரும் சாலை மறியலால் பொதட்டூர்பேட்டை- திருத்தணி இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.