சிவகங்கையில் செய்தியாளர் ஒருவரை அடிக்கப் பாய்வது போல் சென்று எங்கய்யா காத்திருந்த.. யாருய்யா பேட்டி கொடுத்தது.. என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மிரட்டிய நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்த நிகழ்வை செல்போனில் படம் பிடித்தவரை நோக்கி 'நல்லா எடு' என்றும் அவர் ஆவேசம் காட்டியது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புள்ள பதவியில் இருந்துக்கொண்டு பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அமைச்சர்களால் அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தான் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர் ஒருவரை ஒருமையில் பேசி அடிக்கப் பாய்வது போல் சென்று மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 3 மணி நேரம் யாருய்யா காத்திருந்தா, யாருய்யா பேட்டி கொடுத்தது.. என்பன உட்பட இன்னும் பல கடும் சொற்களால் பொதுவெளி என்று கூட பார்க்காமல் அமைச்சர் பெரிய கருப்பன் மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
அண்மையில் தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தன்னிடம் மனு கொடுக்க வந்த பெண்மணி ஒருவரை தலையில் அடித்து சர்ச்சையில் சிக்கி மீண்டார். இப்போது அதற்குள் அடுத்த அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கி அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தேவையற்ற தர்ம சங்கடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கால தாமதமாக வரவில்லை என்றால் அதனை அந்த செய்தியாளரை அழைத்து விளக்கம் அளித்திருக்கலாம்.
அல்லது தனியாக அழைத்துக் கூட திட்டியிருக்கலாம். அதனை விடுத்து அடிக்கப் பாய்வது போல் எல்லோர் முன்னிலையிலும் ஒருமையில் மிரட்டியது அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு பொருத்தமற்றது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இப்படி குற்றங்கள் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக சண்டியர்தனம் செய்வேன் என்றால் அது தனிப்பட்ட அந்த அமைச்சருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திமுக அரசுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி தரும்.