கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற பாஜக தலைவர்கள் இறைவனை வேண்டி விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், 'இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.' என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட செய்தி வருத்தம் அளிக்கிறது. எல்லாம் வல்ல கந்தனின் ஆசியால் அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.' என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள ட்விட்டரில் பதிவில், 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.' என்று தெரிவித்து உள்ளார்.
அதே போன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற தங்களது வேண்டுதல், விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.