தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்க, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, முதல் அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் இன்று சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலமை செயலாளர் சண்முகம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.
மினி கிளினிக்குகளில் ரத்தம் அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை வசதிகள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன் இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.