முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் சட்டசபையில் அதிமுக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
சட்டசபையில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "மனிதரில் புனிதராக தென்மாவட்ட மக்களால் போற்றி வணங்கப்படும் பென்னி குவிக் என்ற பொறியாளர் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தன்னுடைய சொத்தை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டினார்.
1886ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1000 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பாசனம் தமிழகத்திற்கு செல்லுபடியாகும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தப்படி 136 ஆண்டுகள்தான் நிறைவடைந்திருக்கின்ற நிலையில், இன்னும் 865 ஆண்டுகள் நமக்கு உரிமை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும், அவர்களாகவே நீரைத் திறக்கிறார்கள், அவர்களாகவே நீரை மூடிவிடுகிறார்கள் என கேரளா அரசு மீது குற்றம்சாட்டிய ஓ.பி.எஸ், கேரளா அரசுடன் நல்ல நட்பில் இருக்கும் நம் முதல்வர் அந்த நட்பை பயன்படுத்தி முழுக்கொள்ளளவான 152 அடிக்கு நீரைத் தேக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்தார்.