தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் அந்த அறிக்கை அடிப்படையில் அவருக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களையடுத்து நுண்ணறிவு பிரிவினர் தயாரித்திருக்கக்கூடிய அறிக்கையில் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அண்ணாமலைக்கு மாநில அரசால் ’ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு என்பது இந்தியாவில் 4-வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.