அரசுப் பேருந்துகள் சைவ உணவங்களில் மட்டும் தான் நிறுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.
அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை நேற்று அறிவித்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்றும், உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
அதுபோல கழிப்பிட வசதி இலவசமாகவும் அவற்றோடு உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், பயோ-கழிவறை இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலின் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் சர்ச்சை ஏற்பட்டது. பலரும் அதனை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். சர்ச்சையைத்தொடர்ந்து சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற வார்த்தைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பில், “உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்” என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.