பாஜக வேல் யாத்திரையில் கொரோனா தொற்று பரப்பியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 135 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் வாராகி என்பவர் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் டிஜிபி சார்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பாஜக மாநிலத் தலைவர் முருகன் அனுமதியின்றி வேல் யாத்திரையை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கொரோனா பரவக் காரணமாக இருந்தது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, சாலையை மறித்துப் பொதுமக்களுக்கு இடையூறு செய்தது ஆகிய குற்றங்களுக்காக பாஜகவினர் 135 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.