நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் மற்றும் நாகூர் தர்க்காவில் நடைபெறும் பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிபடைந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்கள் தத்தளித்து கொண்டு இருக்கின்றன.
இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இன்று அவர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதையொட்டி இன்று காலை 8 மணி அளவில் அவர் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு வருகை தந்தார்.
தேவாலய பங்கு தந்தை பிரபாகரன் முதல்வரை வரவேற்றார். பிறகு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் பங்கேற்றார். அப்போது வேளாங்கண்ணி மாதா சொரூபம் நினைவு பரிசாக முதல்வருக்கு வழங்கப்பட்டது.
இதன்பிறகு நாகூர் தர்கா பகுதியில் முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், இன்று மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.