'எனக்கு இயக்கம்தான் குடும்பம்; இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைவரும் என் உறவினர்கள்' என நாகர்கோவில் பா.ஜ. எம்.எல்.ஏ. காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜ.வை சேர்ந்த எம்.ஆர்.காந்தி (77) உள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.இளைஞர் ஒருவர் தன் பைக்கில் பதிவு எண் இருக்க வேண்டிய இடத்தில் 'எம்.எல்.ஏ. - எம்.ஆர்.காந்தியின் பேரன்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகையை பொருத்தியுள்ளார்.
இது குறித்து எம்.ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவிலில் என் பேரன் என்று சொல்லி வாகனத்தில் 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொண்ட பையன் என் 25 ஆண்டு கால உதவியாளர் கண்ணன் என்பவரின் மகன். அவரது தவறுகளை சரி செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுதும் என் மீது அன்பும் பற்றுதலும் கொண்ட ஒவ்வொருவரும் என் சகோதர சகோதரியர் மகள் மகன் பேரன் பேத்தி ஸ்தானத்தில் உள்ளவர்களே. எனக்கு இயக்கம்தான் குடும்பம். இயக்கத்தை சார்ந்த அனைவரும் என் உறவினர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.