கடலூர் திமுக எம்எல்ஏ கோ. அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த வாரம் மேயர், நகராட்சி தலைவர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பல இடங்களில் கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் பதவிகளைக் கைப்பற்றியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கூட்டணி கட்சியினர் அதிருப்தி தெரிவித்த நிலையில், அப்படி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்தார்.
அப்படி தான் கடலூரின் நெல்லிக்குப்பம் நகராட்சி விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திமுகவினர் நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றினர். முதல்வரின் உத்தரவுக்குப் பின்னரும் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் தான் கடலூர் எம்எல்ஏ அய்யப்பன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது.