தமிழ்நாட்டுக்கு தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க விதிகள் உள்ளனவா என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளனவா என தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு விரைவில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை உருவாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.