முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரும் 1295 கோடியே 76 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மதுரை மாநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் 1295 கோடியே 76 லட்ச ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
நாள் ஒன்றுக்கு 125 எம்.எல்.டி தண்ணீர் குழாய் மூலம் மதுரைக்கு எடுத்துவரப்படும். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும், அங்கு கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். பல்வேறு துறைகளில் சுமார் 72 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 3 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.