பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திட தமிழக முதல்வர் உடனடியாக உத்தரவிடுவதுடன், ஏழை மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்கிடவேண்டும் என்று தூத்துக்குடி ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுறுப்பதாவது: அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி முருகானந்தம் என்பவரது மகள் 17வயதான லாவண்யா.
மாணவி லாவண்யா தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமூகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி லாவண்யா 8ம் வகுப்பு முதல் இந்த பள்ளியில் சேர்ந்து மாணவியர் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நன்றாக படித்து வந்த மாணவி லாவண்யாவை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி தலைமையாசிரியர், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளியின் அருட்சகோதரிகள் உள்ளிட்டவர்கள் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளனர்.
மாணவி லாவண்யா குடும்பத்தின் ஏழ்மையை சாதமாக்கிக் கொண்டு அவரை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடமும், அவர்களது ஏழ்மை நிலையை காரணம் காட்டி நீங்கள் கண்டிப்பாக மதம் மாற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதற்கு, மாணவி லாவண்யாவும், மாணவியின் பெற்றோரும் சம்மதிக்கவில்லை. இந்த காரணத்தால், பள்ளி நிர்வாகத்தினர் மாணவி லாவண்யாவை பழி வாங்கும் நோக்கத்தில் மாணவியை படிக்க விடாது விடுதி பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கண்டிப்பாக செய்யவேண்டும் என்று தினமும் கட்டாயப்படுத்தி தொடர்ந்து பல வகையான தொல்லைகளை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி லாவண்யா வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்த விபரங்களையம் தெளிவாக குறிப்பிட்டு தனது உயிரை நீத்துள்ளது மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. மதம் என்பது முக்கியமல்ல கல்வி தான் முக்கியம் என்று கருதிய மாணவி லாவண்யா பள்ளி நிர்வாகத்தின் பெரும் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அனைத்து மத மக்களும் ஒற்றமையாக, சகோதரர்களாக வாழ்ந்து வரும் தமிழகத்தில், இந்த துயர சம்பவம் நடத்துள்ளது தாங்க முடியாத துயரைத் தருகிறது. எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில் பாரபட்சமின்றி தகுந்த நடவடிக்கை எடுப்பது மிகமிக அவசியமாகும்.
ஏனெனில் மாணவி லாவண்யா தனது மரணத்துக்கு முன் தனது தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெளிவாக வீடியோ பதிவு செய்துள்ளார். இருந்தபோதும் இந்த வீடியோ பதிவினை காவல்துறை சரியாக ஏற்றுக்கொள்ளாமல் வழக்கை திசை திருப்புவதாக அவரது பெற்றோரே புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த வழக்கில் சரியான நீதி கிடைத்திட சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டணை வழங்கிடவேண்டும். இந்த தண்டனையானது இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடைபெறாத வகையில் ஒரு படிப்பினையாகவும், பாடமாகவும் அமைந்திடவேண்டும்.
இதுபோன்ற துயர சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுத்திட கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்திடவேண்டும். விலை மதிக்க முடியாத உயிரை இழந்து விட்ட ஏழை மாணவி லாவண்யாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக தகுந்த நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.