• vilasalnews@gmail.com

"விடுதலை போரில் இந்தியா" என்ற வரலாற்றை தொகுப்பதற்கு தமிழர் தலைவர் ம.பொ.சி.யின் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் - கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள்!

  • Share on

"விடுதலை போரில் இந்தியா" என்ற வரலாற்றை தொகுப்பதற்கு  காங்கிரசின் கொள்கையை பாஜக பின்பற்றக்கூடாது. அதற்கு பதிலாக தமிழர் தலைவர் ம.பொ.சி.யின் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என  பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன்  குளோபல் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 

இந்திய விடுதலை போராட்ட வரலாறு எங்கிருந்து ? யாரால் ? எப்போது ? தோற்றுவிக்கப்பட்டது என்பதில் இந்திய வரலாற்று ஆசிரியர்களிடம் இன்று வரை கருத்தொற்றுமை நிலவவில்லை.  இந்தியா மிகப்பெரிய நாடு, ஒவ்வொரு மாநிலமும் தத்தமது விடுதலைப் போராட்ட வரலாறை தொகுத்து தர வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்ட போது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக இருந்த எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1857 ல் சிப்பாய் புரட்சியில் இருந்து விடுதலை போர் வரலாற்றை எழுத வேண்டும் என்று தினசரி நாளேடுகளில் செய்தியை வெளியிட்டது. இதையறிந்த தமிழரசுக் கழகம் தென்இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சை புரட்சியில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. அதற்கு, இந்திய அரசு வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய குறிப்பும் இவ்வரலாற்று புத்தகத்தில் இடம் பெறும் என்று தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சி அவர்களுக்கு தபால் அனுப்பியது.

சிப்பாய் புரட்சிதான் இந்திய விடுதலைப் போரின் துவக்கம்  என்ற மத்திய அரசின் முடிவை கேரளம், கர்நாடக, மாநில அரசுகள் ஏற்க மறுத்தன. இவர்களை போல் வேறு சில மாநிலங்களும் இந்தக் கொள்கையில் உடன்படவில்லை. இருப்பினும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ஓரிஸ்ஸா, போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் விடுதலை போராட்ட வரலாற்றை தொகுத்து மத்திய குழுவிடம் ஒப்படைத்து விட்டன. அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நமது மாநிலத்தின் வரலாறை வெளியிடாமல் இருந்து விட்டது.

"விடுதலைப் போரில் கர்நாடகம்" என்ற தலைப்பில் ஹைதர் அலி, திப்புசுல்தான், கிட்டூர் சென்னம்மாள் போன்ற வீரர்கள் 1857 க்கு முன்னரே புரட்சியில் ஈடுபட்டார்கள் என்றும் 1824ல் நடந்த கிட்டூர் சென்னம்மாளின் புரட்சி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அந்நூல் குறிப்பிடுகிறது. மேலும் 1824 க்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென் தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த வீரப்புரட்சியையும் இறுதியில் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் துரோகத்தால் தூக்கில் தொங்கியதையும் "விடுதலைப்போரில் கர்நாடகம்" என்ற நூல் விரிவாக குறிப்பிடுகிறது.

"விடுதலைப்போரில் கேரளம்" என்ற நூலில் திருவிதாங்கூரை சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியை சேர்ந்த பலியத் அச்சன், மலபாரை சேர்ந்த பழசிராஜா ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிடுகிறது. இதில் வேலுத் தம்பியினுடைய குண்டாரப் பிரகடனம் சுதந்திரப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது என்று குறிப்பிடும். இந்நூல் வேலுத்தம்பியின் போராட்டம் 1806 ல் நடைபெற்றதாகும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

"நெல்லை மாவட்ட சுதந்திர போராட்ட வரலாறு" என்ற நூலை தொகுத்த தேசபக்தர் திரு.சோமாயாஜுலு அவர்கள்  , விடுதலைப் போர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனது நூலில் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

தமிழர் தலைவர் ம.பொ.சி. அவர்கள் ஒரு சுதந்திர போராட்ட வீரர், மிகச்சிறந்த தேசப்பற்றாளர். இவர் தென்னிந்தியா முழுவதும் பல வருடங்கள் சுற்றுப்பயணம் செய்து "விடுதலைப்போரில் தமிழகம்" என்ற புத்தகத்தை தொகுத்துள்ளார். 2 பாகங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் விடுதலைப் போரின் துவக்கமே வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்துதான் துவங்குகிறது என்பதை மிகச்சிறப்பாக சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் எந்தக் கொள்கையுடனும் சமரசம் செய்யாமல் மிக நேர்மையாக பதிவு செய்கிறார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டக்குழு செயல்படாமல் நீர்த்துப் போய் விட்டது. அதன்பிறகு இந்த முயற்சி இந்திய அரசால் கைவிடப்பட்டது. இந்தியா தனது 75 வது ஆண்டின் விடுதலை விழாவை கொண்டாட இருக்கிறது. ஆனால் இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தனது நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை தொகுக்க விடாமல் மிக கவனமாக பார்த்து கொண்டது. காங்கிரஸ் கட்சியால்தான் நாடு விடுதலை அடைந்தது என்பதை ஆவணப்படுத்துவதற்காக உண்மையான தியாக சீலர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. எனவே பாரத நாட்டை ஆளும் பாஜக அரசு காங்கிரஸ் அரசின் கொள்கைகளை தூக்கி எரிந்து விட்டு தென்னிந்தியாவில் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து தனது விடுதலை வரலாற்றை தொகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share on

ஞாயிறு (ஜன 23) தமிழகத்தில் முழு ஊடரங்கு - தமிழக அரசு அறிவிப்பு

தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்!

  • Share on