கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 23 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு கடந்த 5 ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த (ஜன ) 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் முதல் முழு ஊரடங்கு கடந்த 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16 ஆம் தேதி 2வது ஞாயிறு முழு ஊரடங்கு அமலானது. இந்த 2 முழு ஊரடங்கு நாட்களிலுமே அத்தியாவசிய பணிகளைச் செய்யவும் திருமணத்திற்குச் செல்லவும் மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. பொது போக்குவரத்திற்கு அரசு முற்றிலும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், வரும் ஜனவரி 23 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.