• vilasalnews@gmail.com

கூகுள் மேப்-ஐ நம்பி லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்

  • Share on

திருநெல்வேலியில், கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி லாரியை இயக்கிய ஓட்டுனர் ஒருவரின் பயணம் அவருக்கு மிக மோசமான அனுபவத்தை கொடுத்துள்ளது.

நெல்லையில், கூகுள் மேப் காட்டுகின்றதே என்ற காரணத்துக்காக, கனரக வாகனம் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியில் லாரியை ஓட்டி சென்றுள்ளார் ஒரு ஓட்டுநர். அப்படி செல்கையில் நெல்லை டவுண் பகுதியில் இருக்கும் பழமையான கல்மண்டபத்தில் லாரியுடன் அவர் சிக்கிக்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கபட்டது. மேலும் லாரி ஓட்டுனருக்கு காவல்துறையினர் அபராதமும் விதித்தனர்.

நெல்லை டவுன் சேரன்மகாதேவி சாலையில் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான காட்சி மண்டபம் அமைந்துள்ளது. அங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனொரு பகுதியாக கம்பா நதியில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் ரஜத ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சாலையை கனரக வாகனங்கள் பயன்படுத்த காவல்துறையினர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில், அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லாதவாறு இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் திருக்கல்யாண விழா காட்சிக்காக சப்பரம் சென்று வர வசதிக்காக அந்த இரும்புக் கம்பிகள் கழற்றி வைக்கப்பட்டன. அதன் பிறகு இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்தான் சென்னையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக கனரக லாரி ஓட்டுநரொருவர் கூகுள் மேப் உதவியுடன் வாகனம் ஓட்டி வந்துள்ளார். கூகுள் மேப் நெல்லை மாநகருக்குள் சில தவறான வழிகளை காட்டியுள்ளது. அதில் சந்திப் பிள்ளையார் கோயிலிலிருந்து சேரன்மகாதேவி சாலை செல்லும் வழியும் ஒன்று.

அந்த வழி, ஒருவழிப்பாதை என்பதுடன் மட்டுமல்லாது அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லவும் தடை உள்ளது. கூகுள் மேப் தவறான வழியை காட்டியதை அறிந்திடாத ஓட்டுனர், சந்திப் பிள்ளையார் கோயில் சேரன்மாதேவி சாலையில் வாகனத்தை இயக்கி உள்ளார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் ‘லாரி இந்த வழியாக செல்லாது’ என ஓட்டுனரிடம் அறிவுறுத்தியுள்ளனர். எதையும் பொருட்படுத்தாது லாரியை தொடர்ந்து இயக்கியுள்ளார் அவர்.

லாரி ஒருகட்டத்தில் காட்சி மண்டபத்தில் ஒரு வாயிலில் சிக்கிக்கொண்டது. லாரியை வெளியே எடுக்க முடியாமல் சிக்கித் தவித்த ஓட்டுநரை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லாரியை மீட்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி வந்துள்ளனர். மீட்பு பணியின் போது லாரியின் பாகங்கள் பட்டு பழமையான நெல்லையப்பர் கோயில் கல் மண்டபம் சிதலம் அடைய தொடங்கியுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம், ‘ஒரு வழிப்பாதை மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை என்பது குறித்தான முறையான அறிவிப்பு இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை மெதுவாக மீட்டெடுத்தனர். பின்னர் லாரி ஓட்டுனர் மீது நெல்லை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு லாரிக்கு அபராதமும் விதித்து காவல்நிலையத்திற்கு லாரியை எடுத்துச்சென்றனர்.

பல நேரங்களில் வழி தெரியாத இடங்களுக்கு கூட நம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் கூகுள் மேப்பை நம்பி மட்டுமே எல்லா நேரமும் செயல்பட கூடாது என்பதையே, இந்த நிகழ்வு நமக்கும் சொல்கிறது.!

  • Share on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மாஜி தலைவர் முறைகேடு : வெளிநாட்டு முதலீடு பங்குகள் பறிமுதல்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை!

  • Share on