தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவராக இருந்த எம்.ஜி.எம்.மாறன், சட்ட விரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து, தில்லுமுல்லுவில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், 2014ல் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகார்:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக 2007, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு பங்குகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
இதன் பின்னணியில், எம்.ஜி.எம்., குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரான நேசமணிமாறன் முத்து, 70, என்ற எம்.ஜி.எம்.மாறன் உள்ளார்.இவர், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவராக இருந்த போது தான் முறைகேடு நடந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அப்போது, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக, 608 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. இது குறித்து, மாறன் உள்ளிட்ட வங்கி நிர்வாகிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.தொடர் விசாரணையில், முறைகேடுக்கு மாறன் மூளையாக செயல்பட்டுள்ளது தெரிய வந்தது.
அவர், 2005 - 06 மற்றும் 2006 - 07ம் ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு எதிராக, சிங்கப்பூரில் உள்ள இரண்டு நிறுவனங்களில் 29௪ கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளார்.இதற்கு இந்தியாவில் செயல்படும் 'ஆனந்த் டிரான்ஸ்போர்ட், எம்.ஜி.எம்., என்டர்டெயின்மென்ட், எம்.ஜி.எம்., டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ்' உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி உள்ளார்.
இதனால் மாறன் மீது, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள 29௪ கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துஉள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக, மாறன் மற்றும் கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கையும் இருக்கும் என அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.