புரெவி புயலையொட்டி தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசினார். அப்போது புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார்.