பணி நேரத்தில் 'டாஸ்மாக்' கடையில் மது வாங்கிய, இல்லம் தேடி கல்வித் திட்ட பிரசாரக் குழு மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு புதிதாக துவங்கியுள்ள, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை செயல்படுத்த, விழிப்புணர்வு பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சி மாவட்டத்தில், எட்டு குழுவினர் கலைப் பயணம் சென்று, பிரசார பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு குழுவினர், பிரசார வாகனத்தை வழியில் நிறுத்தினர். அதில் இருந்த ஒருவர், பிரசார வாசகம் பொறித்த 'டி - ஷர்ட்'டுடன் சென்று டாஸ்மாக் கடையில், மது பாட்டில் வாங்கிவரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில், திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் கலைப் பயணம் சென்ற பிரசாரக் குழுவில் ஒருவர், பணி நேரத்தில் சீருடையுடன் சென்று மது வாங்கியது தெரிந்தது.இதையடுத்து, ஷர்மிளா என்பவர் தலைமையிலான கலைப்பயண குழு, பிரசார பணியில் இருந்துநீக்கப்பட்டுள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.