குற்றாலம் அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வந்து சீசனை அனுபவித்து செல்வார்கள்.
இதுதவிர மழை காலங்களிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும். அப்போதும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை தென்காசி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களும் குற்றாலத்தில் குளித்து செல்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது நீக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அருவிக்கு வருபவர்கள் சமூக இடைவெளியில் நின்று குளிக்க செல்வதற்காகஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் செல்லும் பாதையில் தரையில் வட்டங்கள் போடப்பட்டுள்ளன. அந்த வட்டத்தில் நின்று குளிக்க செல்ல வேண்டும்.
பொதுமக்கள் வரும் நுழைவு பாதையில் குற்றாலம் நகர பஞ்சாயத்து ஊழியர்கள் பொதுமக்களை பரிசோதனை செய்கிறார்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் தான் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். இந்த பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதால் சுற்றுலாப்பயணிகளும் குற்றாலத்திற்கு வருவதற்கு ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.