பசியால் சிறுவன் தள்ளுவண்டி ஒன்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவகுரு என்ற நபருக்குச் சொந்தமான தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிறுவனின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அங்குள்ள மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் உணவு, தண்ணீரின்றி சிறுவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுவனின் புகைப்படத்தை வைத்து தற்பொழுது காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உணவு, நீர் இல்லாமல் பட்டினியால் சிறுவன் தள்ளுவண்டியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.