போலீஸ், செவிலியர் உள்ளிட்ட அரசு பணியிடங்களில் 3-ம் பாலினத்தவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 3-ம் பாலினத்தவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், சமூகத்தில் அவர்களது நிலையை மேம்படுத்தவும் திருநங்கை நல வாரியத்தை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு பெண் மற்றும் 3-ம் பாலினத்தவர்கள் 12 பேர் என 13 பேர் புதிய உறுப்பினர்களாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டனர். இந்த திருநங்கை நல வாரியத்தின் முதல் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், இயக்குனர் ரத்னா மற்றும் திருநங்கை நல வாரிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சமுதாயத்தில் திருநங்கைகள் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு முன்னர் அமைச்சர் கீதாஜீவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கை நல வாரியம் செயலில் இல்லை. தற்போது மீண்டும் திருநங்கைகளுக்கு தேவையானவை செய்ய இந்த நல வாரியம் இயங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த நல வாரியத்தின் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டு, முதல் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருநங்கைகள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.தமிழகத்தில் 3-ம் பாலினத்தவர்களிடம் ரேஷன் அட்டை இல்லை என்றாலும் அவர்களுக்கும் தி.மு.க. ஆட்சியில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண கட்டண பஸ்களில் இதுவரை 3.15 லட்சம் 3-ம் பாலினத்தவர்கள் பயணம் செய்ய அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து போலீசார், செவிலியர் போன்ற அரசு பணிகளில் 3-ம் பாலினத்தவர்கள் பணியில் சேர சிக்கலான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. இதை சரி செய்யும் விதமாக போலீசார், செவிலியர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு ஏற்படும் சட்டரீதியான சிக்கல்கள் நீக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 7 மாதத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் விருநகரில் இன்று(அதாவது நேற்று) மட்டும் 64 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை 17 ஆயிரம் ‘போக்சோ’ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 1,119 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.