பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிர் இழந்த சம்பவத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :
திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பள்ளி கழிவறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மாணவர்கள் படுகாயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும், காயமுற்ற 4 மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளில் உள்ள கட்டிடத்தின் தரத்தை உடனடியாக உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கழகம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.