திருடர்களை மடக்கிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் பூமிநாதன். இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நவல்பட்டு ரோட்டில் மூன்று டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார்.
ஆனால் அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்கள். இதை அடுத்து அவர்கள் ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட காவலர் பூமிநாதன் அவர்களை விரட்டிப் பிடிக்க சென்றார்.
அப்போது திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் முகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகே சென்றபோது ஒரு டூவீலரை எஸ்ஐ தடுத்து நிறுத்தினார்.
பின்னர் அதிலிருந்து திருடர்களை மடக்கி பிடித்து விட்டு சக காவலர்களுக்கு தகவல் கொடுக்க பூமி நாதன் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த ஆடு திருடும் கும்பல் மறைத்து வைத்து இருந்த அரிவாளை வைத்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி(பொறுப்பு) மற்றும் டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.