தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
அந்த நாட்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதாலும் அதன்மூலம் கொரோனா பரவல் அதிகமாக எளிதாக வழிவக்கும் என்பதாலும் தடை விதிக்கப் படுவதாக அரசு விளக்கியுள்ளது. ஆனால் ஏற்க மறுக்கும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கோயில்களை திறக்க வலியுறுத்துகின்றனர். இதனிடையே நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விஜயதசமி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விஜயதசமி வெள்ளிக்கிழமையில் வருவதால் அன்றைய தினம் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் என்பதால் சாமி தரிசனம் செய்ய முடியாது. எனவே விஜயதசமி நாளில் கோயில்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் விஜயதசமி அன்று கோயிலை திறக்காமல் பிடிவாதமாக இருக்கிறது.
ஆகவே அன்றைய தினம் கோயில்களை திறக்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் இதுகுறித்து அரசு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீண்டும் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், "கொரோனா பரவல் அச்சத்தை தடுக்கவே அரசு வார இறுதி நாள்களில் கோயில்களை மூடி வருகிறது.
மத்திய அரசின் நெறிமுறை களுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மீண்டும் நாளை மருத்துவக்குழுவுடன் கலந்தாலோசிக்க உள்ளார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் இதுகுறித்து மீண்டும் ஆலோசிக்கிறோம். அதுவரை விஜயதசமி அன்று கோயில் திறக்கப்படுமா இல்லையா என உறுதியாக சொல்லமுடியாது” என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இதுபற்றி தமிழக அரசே முடிவு செய்துகொள்ளட்டும்” எனக்கூறி வழக்கை முடித்துவைத்தனர்.