சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் முக ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ளது. நந்தனம் முத்துராமலிங்க தேவர் சாலை -செனடாப் ரோடு - கோட்டூர்புரம் செல்லும் சாலை என இணையும் முக்கியமான பகுதியில் முதல்வரின் வீடு அமைந்துள்ள தால் அங்கு எப்போதுமே பரபரப்பாக இருப்பது வழக்கம். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க பல்வேறு தரப்பினரும் முதல்வரின் இல்லம் நோக்கி வருவது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டின் அருகே ஒருவர் மண்ணெ ண்ணெய் ஊற்றி தீ குளித்தார். தீக்குளித்த நபர் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு பிரிவு போலீசார் காப்பாற்றினர். காயமடைந்த நபருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ஜமீன் தேவர்குளம், காலனித் தெருவைச் சேர்ந்த வெற்றிமாறன். இவர் தமிழ்நாடு பறையர் பேரவை தலைவராக உள்ளார். இவர் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் பதவிக்கு மனுதாக்கல் செய்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, மனுவை ஏற்றுக்கொள்ளக் கோரி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, சிகிச்சையை துரிதப்படுத்த மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.