இரவு நேரத்தில் நடுவழியில் நின்று போன ஸ்கூட்டியில் பெட்ரோல் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக, வெளிச் சத்திற்கு தீ குச்சியை உரசியபோது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கில் தீப்பற்றியதால் இருசக்கர வாகனம் எரிந்து சாம்பலானது.
சிவகங்கை மாவட்டம், தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). அவர் தனது இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதி அருகே உள்ள நாட்டுக்கல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இருச்சக்கர வாகனம் நின்றது.
அதனையடுத்து தியாகராஜன், வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தி பார்த்துள்ளார். அப்போது திடீரென பெட்ரோலில் தீப்பிடித்து இருச்சக்கர வாகனமும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும், அந்த இருச்சக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.