நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மகன் தனுஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் தனுஷ் தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் இன்று 3வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு உயிரிழப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் இறந்த மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி, ” நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.
மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.