சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலா ஸ்ரீ. ஐஏஎஸ் அதிகாரியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் சப்-கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். தர்மலா ஸ்ரீயின் கணவர் தாமரைக்கண்ணன் சென்னையில் மருத்துவராக இருக்கிறார்.
மகப்பேறு காலத்தை முன்னிட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான கரப்பட்டிக்கு வந்துள்ளார் தர்மலா ஸ்ரீ. பிரசவ தேதி நெருங்கி வந்ததும் தர்மலாஸ்ரீயை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் சொல்லி வந்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை விரும்பாத தர்மலா ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 11ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, நேற்று பெண் குழந்தை பிறந்தது.
ஒரு மாவட்டத்தை ஆளும் உயர் அரசு பதவியில் இருந்தும் கூட, தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்காமல், ஒர் பாமரராக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டது பொதுமக்களிடையே வியப்பினையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், அனைத்து தரப்பு மக்களிடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.